சனி, 18 ஜூன், 2011

மரபுவழி


தொலைந்தது சனியனென்று 
முதியோர் இல்லத்திற்கென்னை
அனுப்பியதுபற்றி 
வருத்தமொன்றுமில்லை மகனே,

எனினும் 
இதுபற்றிஎன் 
பேரனிடமட்டும் சொல்லிவிடாதே  !

உனக்குமிங்கே 
தாராளமாய் இடமிருப்பதுபற்றி 
அவனுக்கும் தெரிந்துவிடப்போகிறது !
                                                      *******

சமநீதி


தலித்துக்கென்று 
தேவையில்லைதான் - தனியே ஓர்
இடஒதுக்கீடு !
எல்லோருக்கும் சமநீதி,
சமவாய்ப்பு.

எல்லாம்சரி,

கல்லறை வேலைக்கு
உங்களுக்கும் - கோவில்
கருவறை  வேலைக்கு
எங்களுக்கும் உண்டா சமநீதி ? 
                                       **********
   

சனி, 14 ஆகஸ்ட், 2010

நாடு
அந்நியனுக்கு
அடிமையாய் கிடந்த காலமது
உரிமைக்காக குரல்கொடுத்தால்
குரல்வளை நெரிக்கும் _ வெள்ளைக்கரங்கள்
தடியடி நடத்தும் !

சுதந்திரம்
மலர்ந்து  சிரிக்கிறது !
இப்போதும்,
அப்போதுபோலவே !

எதுவுமே மாறவில்லையா ?
மாறியிருக்கிறதே
தடிபிடித்திருக்கும்
கரங்களின் நிறம் !
_ ஆனந்த சுதந்திரம்.
தொலைநோக்கு

வறுமைக்கோட்டை அழிக்க (!)
ஏழைகளுக்கு நலத்திட்டங்கள்,
செயல்படுத்த நிதி ?
_ வீதிக்கொன்றாய்
டாஸ்மாக் கடைகள்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

சுதந்திரம்


சுத‌ந்திரமாய்
ப‌ற‌க்கிற‌து தேசிய‌க்கொடி
_இழுத்துக்க‌ட்டிய‌ கயிற்றில்.!

ஞாயிறு, 2 மே, 2010

மழை

இடி'த்துக்கொண்டு
சண்டையிட்டதில்
வலித்துவிட்டதோ ?
அழுகிறதே மேகக்கூட்டம் !
செங்கல்சூளையில்
கல்சுமக்கும்
குழந்தைத்தொழிலாளி

_இளமையில் கல் !

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

சிசுக்கொலை

பிரசவிக்கப்பட்டும்
பிரசுரிக்கப்படாமல்
கசக்கியெறியப்படும்-என்
கவிக்குழந்தை !
                                       ******

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

காதலால் கசிந்துருகி...

பிறவிப்பயன்

ஆயிரம்பூக்கள்
மலர்ந்தென்ன பயன் ?
உன்
கூந்தல் ஏறாதுபோனால் !
*****
அமிர்தம்

நீ
எச்சில்படுத்தி
மீதிகொடுத்த அந்த
பாதி சாக்லெட்டின் சுவை !
*****

நீ முத்தமிட்டபோது
என்னுதட்டில்பட்ட
உன் எச்சிலின்
ஈரம் காயாமலிருக்க
எதேனும்
ஒருவழி சொல்லேன் !
*****

உன்,
முகத்தில் பூத்த
வெட்கபூக்களை
பார்க்கவாவது
இன்னொரு
முத்தம் தருவாயா ?
*****

வரமெதுவும் தருவாயா ?
உன்,
தொலைபேசி அழைப்பிற்காக
நொடிதோறும்
தவமிருக்கிறேன் !
*****

என்
பெண்ணை மறந்துவிடு !
அல்லது,
உன்
உயிரை இழந்துவிடு - என்றுகேட்கும்
உன் அப்பாவிடம்
எப்படிச்சொல்வேன்-இரண்டுமே
வேறுவேறல்ல என்பதை !!

ஞாயிறு, 29 மார்ச், 2009

ஆதலால்...

தரிசாய்
கிடந்தது மனசு,
உன்
விழியை பதிப்பித்தாய்,

கரடுமுரடு களைந்தாய்,
உவர்நிலத்தில் உரமேற்றினாய்,
இலக்கற்றுத்திரிந்த என்னில்
இலட்சிய விளக்கொன்றை
ஏற்றிவைத்தாய்,

மெல்ல,
என்
வழியை புதுப்பித்தாய் .

செயற்கையின்
சகவாசம் சீரழித்தபோது
இயற்கையின்
சுகவாசம் காட்டினாய்.
ஆம்,
தென்றலோடு
உலவக்கற்றுத்தந்தாய்,
மலர்களோடு
பழகக்கற்றுத்தந்தாய்,
மனங்களோடு
இளகக்கற்றுத்தந்தாய்,
மனிதர்களை
வாசிக்கக்கற்றுத்தந்தாய்,
மனிதத்தை
நேசிக்கக்கற்றுத்தந்தாய்,
வேண்டாமே சாதியென்று
தீண்டாமல் தள்ளிவைத்தாய்,
ஆண்டானடிமைஎன்ற
அவலத்தை நீயோழித்தாய்,
அன்பிலேது உயர்வுதாழ்வென்ற
பவளத்தை நீயளித்தாய்.

தலைகீழ் மாற்றங்கள்
நிகழ்த்திக்காட்டினாய்,
தரணி போற்ற
நிலைத்துக்காட்டினாய்,
ஆதலால்,
காதலே...
நீ....
வாழ்க.

திங்கள், 16 மார்ச், 2009

முத்துக்குமரா

ஆழிப்பேரலை
அனுகுண்டுவெடிப்பு
எரிமலையின் சீற்றம்
எதுவும்
எம்மை அசைத்ததுவுமில்லை ,
செஞ்சோலை,
புதுக்குடியிருப்பு ,
கொத்துக்குண்டும்-தமிழன்
கொத்துக்கொத்தாய் சாவதுவும்
பள்ளிக்கூடம் நடப்பதெல்லாம்
பதுங்குகுழியில்தான் என்பதுவும்
வெறும் செய்திகள்தாம் எமக்கு,
சாதிக்காரன்
மதத்துக்காரன்-தூரத்து
சொந்தக்காரன் என்பதெல்லாம்
அகன்ற பார்வைகள் எமக்கு ,
தமிழ், தமிழினம் என்றால்
குறுகிய பார்வை என்ற
கூச்சல்போடுவோம்.

ஆயுதம்கொடுக்கலாம்
அஹிம்சாதேசம்,
இனவெறியரசு
தன் மக்களையே அழிக்கலாம்,
போரை,
நிறுத்தச்சொல் என்றால்மட்டும்
இந்தியநரிகள் - சிங்களத்தில்
இறையாண்மை என்று ஊளையிடும்.

அது,
அயல்நாட்டுவிவகாரம் என்ற
அதிகாரக்கும்பலின்
உளறல்கேட்டே
ஊமையாய்க்கிடந்தோம்,
உயிர்ப்பலி குறித்தும்
உணர்வற்றும் நாங்கள்
மீளாத்துயிலில் மூழ்கிக்கிடந்தோம்,

முத்துக்குமரா,
தமிழ்நாட்டுப்பந்தங்களின்
இருலகற்றவா-நீயே
தீப்பந்தமானாய்,

தமிழினப்பற்றினால்
நீ,
தீயைப்பற்றினாய் ,
உன் புறம் பற்றிய
தீ
தமிழகத்தின்
அகம் எரிக்கிறது,

நீ ,
கரும்புவயலின்
இரண்டாம்போகம்,
எறிந்தபின்பு துளிர்விட்டாய்,
ஆனால்,
அறுவடை செய்யத்தான் ஆளில்லை.

உன்
உயிர்த்தெழுதல்
நிஜமாகிப்போனபின்பு
இனி,
பீனிக்ஸ் பற்றிய கதையாடல்
மரித்துப்போகும்,

தமிழீழம்,
உன் தணியாத தாகம்,
நெருப்போடு உறவாடிய நீ,
நிச்சயம்
கடலோடு அலையாடி- ஈழ
கரையோடு கலந்திருப்பாய்.