ஆழிப்பேரலை
அனுகுண்டுவெடிப்பு
எரிமலையின் சீற்றம்
எதுவும்
எம்மை அசைத்ததுவுமில்லை ,
செஞ்சோலை,
புதுக்குடியிருப்பு ,
கொத்துக்குண்டும்-தமிழன்
கொத்துக்கொத்தாய் சாவதுவும்
பள்ளிக்கூடம் நடப்பதெல்லாம்
பதுங்குகுழியில்தான் என்பதுவும்
வெறும் செய்திகள்தாம் எமக்கு,
சாதிக்காரன்
மதத்துக்காரன்-தூரத்து
சொந்தக்காரன் என்பதெல்லாம்
அகன்ற பார்வைகள் எமக்கு ,
தமிழ், தமிழினம் என்றால்
குறுகிய பார்வை என்ற
கூச்சல்போடுவோம்.
ஆயுதம்கொடுக்கலாம்
அஹிம்சாதேசம்,
இனவெறியரசு
தன் மக்களையே அழிக்கலாம்,
போரை,
நிறுத்தச்சொல் என்றால்மட்டும்
இந்தியநரிகள் - சிங்களத்தில்
இறையாண்மை என்று ஊளையிடும்.
அது,
அயல்நாட்டுவிவகாரம் என்ற
அதிகாரக்கும்பலின்
உளறல்கேட்டே
ஊமையாய்க்கிடந்தோம்,
உயிர்ப்பலி குறித்தும்
உணர்வற்றும் நாங்கள்
மீளாத்துயிலில் மூழ்கிக்கிடந்தோம்,
முத்துக்குமரா,
தமிழ்நாட்டுப்பந்தங்களின்
இருலகற்றவா-நீயே
தீப்பந்தமானாய்,
தமிழினப்பற்றினால்
நீ,
தீயைப்பற்றினாய் ,
உன் புறம் பற்றிய
தீ
தமிழகத்தின்
அகம் எரிக்கிறது,
நீ ,
கரும்புவயலின்
இரண்டாம்போகம்,
எறிந்தபின்பு துளிர்விட்டாய்,
ஆனால்,
அறுவடை செய்யத்தான் ஆளில்லை.
உன்
உயிர்த்தெழுதல்
நிஜமாகிப்போனபின்பு
இனி,
பீனிக்ஸ் பற்றிய கதையாடல்
மரித்துப்போகும்,
தமிழீழம்,
உன் தணியாத தாகம்,
நெருப்போடு உறவாடிய நீ,
நிச்சயம்
கடலோடு அலையாடி- ஈழ
கரையோடு கலந்திருப்பாய்.